Monday, March 19, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 8

தவில் வித்வான் தெட்சணாமூர்த்தி

எங்கள் இளமைக்காலத்தின் முக்கிய நிகழ்வாக எங்கள் ஊர்களில் நடக்கும் திருவிழாக்களே இருந்தகாலத்தில், நாதஸ்வரம், தவில் கச்சேரிகள் (சமாக்கள்) எங்களை கவர்ந்தன. ராகங்கள் தெரியாமலே அந்தக்குழ்லோசையில் மயங்கித் திளைத்தோம். தவில் ஓசை,  தாளம் புரியாத  எங்களையும்  தலையாட்டிக்  கிறுங்க வைத்தது.

அக்காலத்தில் வடமராட்சியில் எங்கள் ஊரில், அயலில்  நடக்கும் திருவிழாக்களிற்கு புகழ்பெற்ற தென்னிந்திய நாதஸ்வர, தவில் வித்வான்கள் வருடாவருடம்  வரவழைக்கப்படுவார்கள்.

திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை, குளிக்கரை பிச்சையப்பா பிள்ளை, காருகுறிச்சி அற்ருணாசம், நாமகிரிப்பேடை கிருஷ்ணன், மதுரை சேதுராமன் பொன்னுச்சாமி இப்படியெல்லாம் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்கள் மீது நாங்கள் வைத்திருந்த அபிமானத்துக்கு சற்றும் குறையாத வகையிலே, எங்கள் மண்ணிலே பிறந்த ஒரு தவில் கலைஞன் மீது மோகம் கொண்டிருந்தோம். அவர்தான் அளவெட்டி தெட்சணாமூர்த்தி.

ஆரம்ப காலத்திலே அவரது தந்தையார்தான் தவிலைக் கொண்டுவந்து அரங்கில் வைக்க, அதைச் சுமக்கவும் முடியாத சிறுபையனாக வந்து தன்  தவில் வாசிப்பினால் எல்லோரையும் கட்டிப்போடுவார் என்று எங்கள் அப்பா, பெரியப்பா சொல்லக்கேட்டிருக்கிறேன்.

நாங்கள் கச்சேரி கேட்கும் காலத்திலே, அவர் அழ்கான இளைஞராக இருந்தார்.  வடக்கு வீதியிலே, விடியப்போகும் பொழுதிலே, அவர் நெஞ்சில் தங்கச்சங்கிலி குலுங்கி ஆட,  கால்களை தாளத்திற்கு ஏற்ப புழுதி மணலில் மிதித்து,  அவர் தவிலில் எழுப்பும் நாதமே தனி.

ஒரு கணம் இடிபோல ஒலிக்கும். அடுத்த விநாடியே அருவிபோல பாய்ந்தோடும்.  வாணங்கள் போல சீறும்.  உலுப்பிய மரத்திலிருந்து கொட்டும் மலர்கள் போல,  ஓசைச்சிதறல்கள் பொலபொல வென்று சொரியும்.  வியர்வை அரும்பும் மேனியுடன் தவிலை தாங்கிக்கொண்டு அவர் தான் தொடக்கி எடுத்துக்கொடுத்ததை தொடரமுடியாமல் மற்ற தவில்காரர்கள் தவிக்கும்போது மெதுவாக புன்னகை புரிவதே தனி அழகாக இருக்கும்.

திறமையான கலைஞனுக்கு இருக்கக்கூடிய வித்துவச்செருக்கு அவரிட்ம் இருந்தது. ஆனால் அதையும் குறையாக நினைக்காமல் நாங்கள் மனதார ரசித்தோம்.  எங்கள் கோவிலகளிலே அடிக்கடி பார்த்த "லயஞான குபேர பூபதி" திடீரென்று இந்தியா போய்விட்டார். இசைவிழாக்களிலே காருகுறிச்சி அருணாசலம் போன்ற நாதஸ்வர வித்வான்களுக்கு தவில் வாசித்து பாராட்டுபெற்றார் என்று செய்திகள் வந்தன.

"யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் தனித்தவில் கச்சேரி" என்று சென்னையின் தெருக்களிலே 'போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, திரளான மக்கள் முன்னிலையிலே அவரது கச்சேரிகள் நடக்கின்றன என்று அங்கு போய் வந்தவர்கள் சொல்லும்போது, நாங்கள் எங்களுக்கு கிடைத்த புகழாகக் கருதி நெஞசை நிமிர்த்திக்க்கொண்டோம். பெருமிதம் அடைந்தோம்.

காலப்போக்கில், யாராவது பிரபல தென்னிந்திய நாதஸ்வர வித்வான்  யாழ்ப்பாண பகுதிகளுக்கு வரும்போது தெட்சணாமூர்தியையும் அழைத்து வந்தார்கள்.

என்னுடைய பெரியப்பா 'பொன்னில்லம்' பொன்னையா தெட்சணமூர்த்தியின் நீணடகால நண்பர்.  நல்ல கலா ரசிகரும் கூட.  குளிக்கரை பிச்சையப்பா பிள்ளை (தாமரை பூத்த தடாகமடி என்ற பாட்டு இவரது வாசிப்பால் பலரது அபிமானம் பெற்றது ) என்ற புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவானை ஒருவருட கால ஒப்பந்தத்தில் இலங்கைக்கு அழைத்து வந்தவர்.

ஒருவருடம் பெரியப்பா,  கரவெட்டி கிழக்கில் எங்கள் விநாயகர் கோயில் திருவிழாவிற்கு ஷேக் சின்ன மெளலானா என்ற புகழ்பெற்ற நாதஸ்வரவித்துவானை இந்தியாவிலிருந்து விஷேடமாக அழைத்து வந்தார். கூடவே எங்கள் தெட்சணாமூர்த்தியையும் அழைத்து வந்திருந்தார்.  அப்போது இளைஞனாக இருந்த எனக்கு எங்கள் தவில் வித்துவானை நீணடகாலத்திற்கு பிறகு பார்க்கப்போகிற சந்தோசம். 

ஆனால் பெரியப்பா வீட்டில்,  ஒருமூலைக்கதிரையில், யாருடனும் பேசாமல், யாரையும் பார்க்காமல்,  முன்பிருந்த அட்டகாசச்சிரிப்பும், கலகலப்பும்  தொலைந்து போய்விட்ட தோரணையில் மெளனமாக அமர்ந்திருந்த அவரைக் கண்டதும்,  என் சந்தோசமெல்லாம் வற்றிப்போய் விட்டது.  மெதுவாக அவ்விடமிருந்து அகன்று விட்டேன்.

இரவு ஷேக சின்ன மெளலானாவின் அட்டகாசமான நாதஸ்வரக்கச்சேரி.  எங்கள் ஊருக்கு வரும் 'கப்பி றோட்டில்" வாகனங்கள் வரிசையாக நின்ற்ன. சரியான கூட்டம்.   .

பெரியப்பா நடத்தும் எந்த நிகழ்வென்றாலும் நான் தானே ஆஸ்தான் அறிவிப்பாளர். மேடையில் ஏறி அறிவிப்பு செய்தபொழுது 'லயஞான குபேர பூபதி' என்று இரண்டுமுறை அழுத்தி சொன்னேன்.  ஆனால் மேடையில் இருந்த 'பூபதி' யின் முகத்தில் எந்தவிதமான மாற்றமும் இருக்கவில்லை. என்னை அவர் நிமிர்ந்து பார்க்கவுமில்லை.  எதுவாக இருந்தாலும் அவரது வாசிப்பில் எந்தவிதமான தளர்வையும் அன்று நான் காணவில்லை.  அதே பொறி பறக்கும் ஒலிச்சிதறல்கள்,  அதே  நாதம்  அதே தாளக்கோர்வைகள்.. சர,சரவென்று வெடித்து சிதறி.. எங்கும் நிறைத்தன.

சில ஆண்டுகளுக்கு பிறகு, அந்த தவில் மேதையின் மறைவுச்செய்தி வந்தபொழுது,  நடந்த எல்லாவற்றையும் நினைத்து, ஒரு வெப்பமான நெடுமூச்சு விட்டேன். கண்கள் கசிந்தன.