Thursday, February 15, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 7

நாடகக் கலைஞன் லடிஸ் வீரமணி

கொழும்பில் 60களில் நடைபெற்ற நிழல் நாடகவிழா என்னைப்போன்ற நாடக அபிமானிகளுக்கு நல்விருந்தாக அமைந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தினமும் ஒன்றாக புகழ்பெற்ற இயக்குனர்களின் நாடகங்கள், சிறந்த கலைஞர்களின் பங்களிப்புடன் மேடையேறின. அவற்றில்; ஒன்றுதான் நடிகவேள் லடிஸ் வீரமணி இயக்கி நடித்த :'சலோமியின் சபதம்'

பைபிளில் வரும் சலோமியின் கதையை ஒஸ்கார்வைல்ட் நாடகமாக எழுதியிருந்தார். அதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு லடிஸ் வீரமணியால் மேடையேற்றப்பட்டது. பார்த்தவர்கள் முற்றுமுழுதாக அந்த நாடகத்தின் தன்மையினால் கவரப்பட்டார்கள்.

ஆரம்பக்காட்சியில் ரோமாபுரி வீரர்கள், கலீலி வீரர்கள் கவர்ச்சியான ஆடை, அணிகலன்களுடன் மேடையில், நிரம்பியிருந்தார்கள். ஏரோது மன்னனின் மாளிகையின் முன்னுள்ள புற்றரையில் கைகளில் மதுக்கிண்ணங்களுடன் அவர்கள் பேசிக்கொள்வதும், உலாவிவருவதும் மிகச்சிறந்த நெறியாள்கையின் வெளிப்பாடாக சீருடன் இருந்தது.

ஓஸ்கார் வைல்ட்டின் வசனங்களை அவர்கள் அழகு தமிழில் பேசினார்கள்.
நிலவைப் பார்த்து அவர்கள் பேசினார்கள். சிரியநாட்டு இளைஞன், நிலவு இளவரசி சலோமி போல இருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஹேரோதியா அரசியின் பணியாளோ 'நிலவு மரணக்குழியிலிருந்து எழுந்து வந்ததுபோல இருக்கிறது. அது சாவின் துர்க்குறி' என்கிறான்.

அவர்களுக்கு நடுவே கம்பீரமாக நடந்து வரும் ஏரோது அன்ரிபாஸ் (லடிஸ் வீரமணி) என்ற குறுநிலமன்னன். அவனது பிறந்தநாளைக்குறிக்குமுகமாக நடனமாடும் அவனது பெறாமகள் சலோமி(சந்திரகலா). பாதாளசிறையில் இடப்பட்டபோதும், அஞ்சாமல் யேசுவின் வருகையைக்கூறும் ஜோவான் (கலைச்செல்வன்) போன்ற பாத்திரங்கள்.

தனது பெறாமகளின் ஆட்டத்தினால் மகிழ்வுற்ற ஏரோது அன்ரிபாஸ், 'நீ எதை விரும்புகிறாயோ.. அது உன்னதாகட்டும்' என்று சலோமிக்கு சொல்கிறான். தனது தாயின் தூண்டுதலினால், தனது ஆட்டத்திற்கு பரிசாக ஜோவானின் தலையை ஏரோதுவிடம் கேட்டுப் பெறுகிறாள் சலோமி.

சலோமியின் "Dance of the seventh veil" குறித்த இசை அல்பத்தின் முகப்பு இது.

ஏறக்குறைய 50 வருடகாலத்திற்கு முந்திய ஒரு தமிழ்நாடகத்தில் சலோமியின் நடனத்தை, பொருத்தமான பின்னணி இசையுடன் புதுமையாக லடிஸ்வீரமணி நிகழ்த்திக்காட்டினார். சபையில் இருந்த நாங்கள் 'கண்கள் வெட்ட மறந்து' பார்த்திருந்தோம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அது என் மனதைவிட்டு அகலவில்லை.

லடிஸ் வீரமணி கொழும்பு ஜிந்துப்பிட்டிப் பகுதியில் இருந்த மனோரஞ்சிதகானசபா மூலமாக நாடகத்துறைக்கு வந்தவர். இவர் நடித்த முதலாவது நாடகமான 'மல்லிகா' 1945ம் ஆண்டில் மேடையேறியது. தொடர்ந்து அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாக கலைத்துறையில் நின்று ஜொலித்தவர்.

'தாய்நாட்டுஎல்லையிலே', 'கங்காணியின்மகன்', 'நாடற்றவன்','சலோமியின் சபதம்', 'கலைஞனின் கனவு', 'மனிதர் எத்தனை உலகம் அத்தனை','ஊசியும் நூலும்' போன்ற பல நாடகங்களை தானே எழுதி, இயக்கி மேடையேற்றியிருக்கிறார்.

புகழ்பெற்ற இலக்கியகாரர்கள், படைப்பாளிகளின் அபிமானக்கலைஞராக லடிஸ் வீரமணி விளங்கியவர். நாடறிந்த எழுத்தாளர் அ.ந.கந்தசாமி தனது 'மதமாற்றம்' நாடகத்தை மேடையேற்ற தீர்மானித்தபொழுது, அதை இயக்கும் பொறுப்பை லடிஸ் வீரமணியிடமே ஒப்படைத்தார். இந்த நாடகத்தில் கவிஞர் சில்லையூர் செல்வராஜன் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்கள் நடித்தார்கள் என்பது குறிப்பிடற்குரியது.

அதேபோல கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி, தனது 'கண்மணியாள் காதையை' லடிஸ் வீரமணியே வில்லடித்துப்பாடவேண்டுமென்று விரும்பி எழுதியதாக கூறப்படுகிறது. ஆமாம். வில்லிசை நிகழ்ச்சியிலே புகழ்பெற்ற கலைஞனாகவும் லடிஸ் வீரமணி விளங்கினார்.

'உங்கள் மேடைநாடகமுன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தவர் யார்' என்று கேட்டபொழுது, லடிஸ் வீரமணி இப்படிப் அழகு தமிழில் பதில் சொல்லியிருக்கிறார். 'சிப்பியிலே முத்து, சேற்றிலே செந்தாமரை, குப்பையிலே குண்டுமணி, பாதையிலே வீரமணி என்றிருந்தவரை உயர்மட்டத்திற்கு கொண்டுவந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி'

'வாடைக்காற்று' திரைப்படமானபொழுது ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. லடிஸ் வீரமணி சம்பந்தப்பட்டதுதான். பேசாலையில் வெளிப்புறப் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து, கொழும்பில் சிலோன் ஸ்ரூடியோ அரங்கில் உள்ளக காட்சி ஓன்று படம்பிடிக்கப்பட இருந்தது. ஒரு இளம்பெண்ணை பிடித்திருப்பதாக நம்பப்படும் பேயை விரட்டும் காட்சி அந்தக்காட்சியில் பேயோட்டியாக லடிஸ் வீரமணியே நடிக்கவேண்டும் என்று முடிவெடுத்து, அவரை அழைப்பித்தார்கள்.

வந்தவர் விஷயத்தை விபரமாகக் கேட்டுக்கொண்டு தயாரிப்பாளரிடம், கொஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு காணாமல் போய்விட்டார். காட்சி எடுப்பதற்கு தயார்நிலையில் இருந்தது. 'லடிஸைக் காணவில்லை' என்பதுதான் பேச்சு. ஒரு மணித்தியாலத்தின்பின் லடிஸ், தலையை 'மொட்டை'யாக சலூனில் வழித்துக்கொண்டு வந்தார். அழகிய 'பாகவதர்' கிராப்புடன் இருந்த லடிஸ் வீரமணி, நடிப்பதற்காக இந்தக்கோலத்தில் வந்து நின்றது எல்லோருக்கும் ஆச்சர்யமாகவிருந்தது.

ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காமல், திருநீற்றை அள்ளி பூசிக்கொண்டு, உடுக்கெடுத்து அடித்து, ஆவேசமாகப்பாடி, லடிஸ் வீரமணி ஒரு பேயோட்டியை கண்முன்னால் கொண்டுவந்தார்.

ஒரு குறிப்பு. சிந்தாமணி பத்திரிகையில், 'வாடைக்காற்று'க்கான விமர்சனம் எழுதி, நடிகர்களுக்கு புள்ளி வழங்கியவர்கள், கதாநாயகர்களாக படம் முழுதும் வந்த நடிகர்களைவிட, அதிகப்புள்ளிகளை சில நிமிடங்களே வந்த கலைஞன் லடிஸ் வீரமணிக்கு வழங்கியிருந்தார்கள்.

'சலோமியின் சபதம்' 'கண்மணியாள் காதை' இரண்டும் மறைந்த அந்தக்கலைஞனின் புகழை என்றும் நினைவூட்டும்.

மகாகவி உருத்திரமூர்த்தி இப்படிச்சொல்கிறார், தணது கண்மணியாள் காதை தொடக்கத்தில் -

'புலவர் பெருந்தகை ஒருவர் புனைந்த
கப்பல் ஓட்டிய தமிழனின் கதையை
வீரமணி தன்வில்லடித் தோத
ஒரு நாட்கேட்டேன். உடல் சிலிர்ப்படைந்தேன்...'

Saturday, February 10, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 6


குச்சுப்புடி நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன்

ஆடற்கலையென்றவுடன எங்களில் பலர் பரதநாட்டியத்தை மட்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். அதனோடு எங்களுக்கு பரிச்சியம் அதிகம் அதனால்தான்.

குச்சுப்புடி, கதகளி, மோகினியாட்டம் என்றெல்லாம் நிகழ்த்தப்படும் ஆடல்வகைகளை பயிலவும், அரங்கேற்றவும், ரசிக்கவும் எங்களுக்கு பொதுவாக சந்தர்ப்பம் கிடைப்பதி;லை.

ஆனால் யாழ்மாவட்டத்தில் வல்வை மண்ணில் பிறந்த ஒரு நாட்டியக்கலைஞர், பரதத்தோடு இம்மூன்று ஆடல்வகைகளையும் இந்தியாவில் சிறந்தகுருமாரிடம் கற்றுத்தேர்ந்து, இலங்கை திரும்பியபின் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முக்கியமாக தெய்வீக அழகும் பக்திபாவமும் பொருந்திய அவரது குச்சுப்புடி நடனநிகழ்வு என்னை மிகவும் கவர்ந்தது.

அவர்தான் ரங்கா விவேகானந்தன்..

தனது எட்டாவது வயதில் தனது முதலாவது குரு காலஞ்சென்ற கீதாஞ்சலி கே.நல்லையா அவர்களிடம் பரதம் பயின்று அரங்கேறிய ரங்கா, பின்னர் தென்னிந்தியா சென்று பரதத்தின் நுணுக்கங்களை குரு மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடமும், கதகளி நாட்டியக்கலையை குரு கோபிநாத் அவர்களிடமும், மோகினி ஆட்டம் என்ற ஆடற்கலையை குரு கலாமண்டலம் நடனம் கோபாலகிருஷ்ணன் அவர்களிடமும் பயின்று, தனது சிறப்புக்கலையான குச்சுப்புடி நடனத்தை குச்சுப்புடி கலைக்கழக நிறுவனரான குரு வேம்பட்டி சின்ன சத்தியம் அவர்களிடம் உயர்நிலைமாணவியாக தேர்ந்து, 'நாட்டிய விசாரத்' என்ற டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.


தென்னிந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் குச்சிலாபுரம் என்ற கிராமத்தில் உருவாகியதாகக் கூறப்படும், இந்த ஆடற்கலை ஆரம்பத்தில் பிராமண ஆடவர்களாலேயே நிகழ்த்தப்பட்டதாம். சித்தேந்திர யோகி என்பவர் இதை செழுமைப்படுத்தி, பெண்கள் ஆடும்வண்ணம் அமைத்து பிரபல்யப்படுத்தினார் என்கிறார்கள். நாட்டியநாடகம் போன்ற அமைப்பில் பக்தி சார்ந்த கதைகள் சொல்லும் இந்த நாட்டியவடிவம், ஆடுபவரின் திறனால், வேறுபட்ட உணர்வுக்கோர்வைகளை பார்ப்பவர் மனதில் எளிதாக உருவாக்கும் எழில்மிகு கலையாகும்.

தனது குச்சுப்புடி நாட்டியக்குருவான வேம்பட்டி சின்னசத்யம் அவர்களுடன், இந்தியாவெங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி ஊடகங்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற ரங்கா, தொடர்ந்து விசேட அழைப்புக்களின் பேரில் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, சுவீட்சலாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலகப்பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலர் முன்னிலையில் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.

தொழில்ரீதியான மேற்கத்திய 'பாலே' நடனக்கலைஞர்கள் உள்ளிட்ட வேறுபட்ட நாட்டியக்கலைஞர்களுக்காக சிறப்புப் பயிற்சிப்பட்டறைகள் நடாத்தவும் ரங்கா அழைக்கப்பட்டிருக்கிறார்.

இத்தாலியில் ஸ்போலெற்றோ என்ற நகரில்; நடைபெற்ற 'இரண்டு உலகங்களின் நாட்டியவிழா', ஜெர்மனியில் பொன் நகரிலும், இத்தாலியில் அங்கோனா நகரிலும், குறோசியா நாட்டிலும் நடைபெற்ற சர்வதேச நாட்டியவிழாக்களில் இந்திய நடனக்கலையை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் நடனமாட ரங்காவை அழைத்திருந்தார்கள்.

பின்னாளில் இவ்வாறு உலகப்பிரசித்திபெற்ற இந்தக்கலைஞரின் ஆரம்பகாலத்தில் வழங்கிய ஒரு குச்சுப்புடி நாட்டிய நிகழ்ச்சியில் நானும் சம்பந்தப்பட்டது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

ரங்கா அப்போதுதான் இந்தியாவில் படித்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தார். அவரது தந்தையாரான விவேகானந்தனும், எனது பெரியதந்தையாரான பொன்னையாவும் நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பின் அடிப்படையில், எங்கள் கிராமமான கரவெட்டிகிழக்கில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ரங்காவின் குச்சுப்புடி நடன நிகழ்வொன்றை நடாத்துவதற்கு சம்மதித்தார்கள்.

இருபது வயதிற்கு அண்மித்த எனது இளமைக்காலத்தில் அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளனாக அமையும் வாய்ப்பை பெரியப்பா எனக்கு தந்தார். எனக்கு மிகுந்த சந்தோசம்.

ரங்காவின் குச்சுப்புடி நடனத்திற்கான பாடல்கள் யாவையும் தென்னிந்தியாவிலிருந்தே பதிவுசெய்து கொண்டு வந்திருந்தார்கள்;. எல்லாமே தெலுங்குப்பாடல்கள். ஆனால் அவற்றுக்கான விளக்கத்தை தமிழில் வைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு நடனத்தின் முன்னதாக, அந்த விளக்கங்களை சுவைபட சொல்லிவைத்தேன். கலைஞனாக வரவேண்டுமென்ற ஆசை துளிர்விட்டுக்கொண்டிருந்த காலம். எனவே சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டு விளக்கங்களை நாடகபாணியில் ஆனால் மிகையில்லாமல் வழங்கியதாக ஞாபகம்.

அத்தோடு ரங்கா கொழும்பிலும், கண்டியிலும் நடாத்திய இரண்டு நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு என்னை 'நிகழ்ச்சித்தொகுப்பாளனாக' அழைத்து சந்தோசப்படுத்தினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ரங்காவின் மிகச்சிறந்ததோர் நடனநிகழ்வை அண்மையில் நின்று பார்க்கவும், அதில் சிறிதளவேனும் என்பங்கும் இருக்க நேர்ந்ததும் சந்தோசமான நினைவுகளாயின.

இசையைப்போலவே, நடனத்திற்கும் பூகோள எல்லைகளோ, இனங்களின் பிரிவுகளோ தடையாகவிருப்பதில்லை என்பார்கள். இந்தக் கலைவடிவங்களைப் பொறுத்தவரையில் அனேகமான சுவர்களெல்லாம் இடிந்து போய்விடுகின்றன. கலை பலரையும், பல இனங்களையும், பல நாடுகளையும் இணைத்து ஒன்றாக்கும் சக்தி வாய்ந்தது.

இந்த கருத்தின் அடிப்படையில் ரங்கா விவேகானந்தன் தொடரந்தும் தன் கலைப்பணியில் இயங்கிக்கொண்டிருக்கிறார். அதுவும் கீழைத்தேய கலையின் பரிச்சியமே இல்லாத தென் அமெரிக்காவின் ஆர்ஜென்ரீனா நாட்டில் வாழ்ந்து கொண்டு 'ஆனந்தராஜம்' என்ற பெயரில் இந்த நாட்டின் முதலாவது இந்திய நாட்டிய, இசைப்பள்ளியை நிறுவி நடத்திவருகிறார்.

ஸ்பானியமொழி பேசும் சிறுமிகளும், இளம்பெண்களும், தென்னிந்தியபாணி நடன ஆடையலங்காரங்களுடன், குச்சுப்புடி நடனங்களை இவரது நெறியாள்கையில் பயின்று அரங்கேறி வருகிறார்கள். மொழிபுரியாவிடினும், இசையினாலும், ஆடற்கலையின் அழகினாலும் கவரப்பட்ட அந்நாட்டுப்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு புதிய கலைவடிவத்தில் பயிற்சிபெற ரங்காவின் 'ஆனந்தராஜம்' நடனப்பள்ளிக்கு மகிழ்வுடன் அனுப்பிவருகிறார்கள்.

கனடா, இலங்கை, அவுஸ்திரெலியா, ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அவரிடம் பயின்று அரங்கேறியவர்கள் அந்த பாரம்பரியத்தை தொடர்ந்தும் பரப்பிவருகிறார்கள். இவர்களோடு ஆர்ஜென்ரீனா நாட்டிலிருந்து சில்வியா றிஸ்ஸி, லியோனாரா பொனெற்றோ, நேற்றாலியா சல்காடோ என்ற பெயர்களும் வெகுசீக்கிரத்தில் இணைந்து கொள்ளப்போகின்றன.

'மிகுந்த அழகுடன் காந்தம் போல பார்ப்போரைக் கவரும் நாட்டிய பாணி இவருடையது' என்று லண்டன் ரைம்ஸ் நாளேடு இவருடைய நாட்டிய நிகழ்ச்சி பற்றி கூறியிருக்கிறது.

இப்படி எண்ணிலடங்கா பாராட்டுக்களை உலகெங்கிலிருந்தும் தனதாக்கிக்கொண்ட நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் எங்கள் மண்ணுக்கு சொந்தமானவர் என்று நாங்கள் நிச்சயமாப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இறுதியாக ஒரு தகவல், நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் அடியொற்றி பாக்குநீரிணையை நீந்திக்கடந்து, வேறு பலசாதனைகளை நிறுவி, ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடக்கும் முயற்சியில் இறப்பைத்தழுவிக்கொண்ட 'ஆழிக்குமரன்' ஆனந்தன், ரங்காவின் (ரங்கமணியின்) உடன்பிறந்த சகோதரனாவார்.

Tuesday, February 6, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 5


கவிஞர் சு.வில்வரத்தினம்

பல வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த ஒரு சிற்றிதழிலே (லண்டனில் வெளிவந்தது) நான் முன் அறிந்திராத ஒரு கவிஞரின் கவிதையை வாசித்த பொழுது என் நெஞ்சில் ஏற்பட்ட சிலிர்ப்பினலும், சோக உணர்வினாலும் நீண்ட நாட்களாக அந்த கவிதை சொன்னதையும் (வரிகளை மறந்து போனேன்) அந்த கவிஞரின் பெயரையும் ஞாபகமாக வைத்திருந்தேன்.

கவிதை வரிகளையும், கவிஞரையும் இனம் கண்டு கொள்ள வேண்டுமென்ற தேடலில், ஒருநாள் இந்த வலைப்பக்கத்தில் அவருடைய சில கவிதைகளையும் அவருடைய புகைப்படத்தையும் காணக் கிடைத்ததினால் மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ச்சியாக, மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தின் வாயிலாக அவரது " அகங்களும் முகங்களும் என்ற் கவிதைத் தொகுதியில் நான் தேடிய கவிதையையும் கண்டுபிடித்தேன். இதுதான் அந்தக் கவிதை.

'நிலவும் நெகிழ்வும்' என்னும் கவிதையில்

"எல்லாம் முடிந்து நெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ் சுமந்தபடி மெல்ல அசைநடைபோடும் மாட்டு வண்டிகள்; வண்டிகளின் பின்னே நாங்கள்....திரும்பிப் பார்த்தால் பின்னிலவில், வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்ட வயல்வெளி வறிதே கிடக்கின்ற சோகம் நெஞ்சைப் பிழியும் துயர்- இன் இசையாய்....

அறுவடை முடித்த வயல் வெறுமையாய், வறுமையாய் கிடக்கின்ற சோகத்தை நெஞ்சில் பதிக்கும் ஒரு கவிதை.

தான் நேசித்த மண்ணை விட்டு இடம் பெயர வேண்டிய நிலை அவருக்கும் நேர்ந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாய் இந்தக் கவிதை -

காற்றுக்கு வந்த சோகம்


முழுவியளத்துக்கு
ஒரு மனுவறியாச் சூனியத்தைக் கண்டு
சூரியனே திகைத்துப் போன காலையிலிருந்து
இப்படித்தான்
உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக்
கிடக்கிறது இக்கிராமம்.

கிராமத்தின் கொல்லைப் புறமாய்
உறங்கிய காற்று
சோம்பல் முறித்தபடியே
எழும்பி மெல்ல வருகிறது.

-------------

என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல.

-----------------

வழுக்கிக் கிடந்தது ஓர் முதுமை.
ஊன்றுகோல் கையெட்டாத் தொலைவிலே.
இழுத்துப் பறிக்கும் மூச்சினிடையே
எதையோ சொல்ல வாயெடுக்கவும்
பறிபோயின சொற்கள்.
பறியுண்ட மூச்சு
மடியைப் பிடித்து உலுக்குவதாய்
காற்று ஒருகால் நடுங்கிற்று.

-------------

பக்கத்திருந்து உறவுகள்
பால் பருக்க,
கால் பிடிக்க,
கை பிடிக்க,
தேவாரம் ஓத,
கோலாகலமாய் பிரிகின்ற உயிர்
அநாதரவாய்,
அருகெரியும் சுடர் விளக்கின்றி
பறை முழக்கமின்றி, பாடையின்றி.....
அட, சாவிலும் கூட ஒரு வாழ்விருந்த கிராமம் இது.

காற்று பரிதவித்தது.
"எங்கே போயின இதன் உறவுகள்?"
ஒன்றும் விளங்காமல் அந்தரித்தது.
அதற்கெங்கே தெரியும்?
காற்றுறங்கும் அகாலத்தில்தான்
மூட்டை முடிச்சுக்களோடு மக்கள்
கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை.

-----------------

வீதியில் தலைநீட்டிய முட்செடியன்றை
வேலியோரமாய் விலக்கியபடியே
மெல்ல நடந்தது காற்று
சொல்லிக் கொள்ளாமல் போன புதல்வரைத் தேடும்
சோகந் தாளாத தாயைப் போல
.


திகைத்து நின்ற காற்றுக்கு - தேரடியில் உறங்கி விழித்த சிறுவன் திருவிழா முடிந்தது என்றறிந்து திகைப்பதுக்கு ஒப்பிடும் உவமை அழகும்,
அட, சாவிலும் கூட ஒரு வாழ்விருந்த கிராமம் இது என்ற வரிகள் கூறும் யதார்த்தமும்
இது போன்ற் சு.வி யின் கவிதைகளுக்கு சாகா வரமளிக்கும்.

சுனாமிப் பேரழிவு ந்டந்த சில நாட்களின் பின்னர் இது நடந்தது. ஒரு நண்பர் மூலமாக கவிஞரின் தொலைபேசி இலக்கம் கிடைக்க, திரிகோணமலையில் அவரது வீட்டுக்கும், வேலையிடத்துக்குமாக அழைத்து, ஒருவாறு அவரோடு பேசினேன். அவரது கவிதைகள் மீதுள்ள என் விருப்பத்தை, "நிலவும் நெகிழ்வும்" கவிதை மூலம் அவரை தேடும் எண்ணம் வந்ததை எல்லாம் சொன்னேன். நீண்ட நேரம் பேசியிருப்போம். அவரை நேரில் பார்த்ததுக்கு ஒப்பாக இருந்தது.

சென்ற டிசம்பர் 10ந்திகதி காலை, நான் நோய்வாய்ப்பட்டிருந்த வேளை, சகோதரர் சச்சி என்னை தொலைபேசியில் அழைத்து சொன்னார் - கவிஞர் இறந்து விட்டார்.

"மெல்ல நடந்தது காற்று
சொல்லிக் கொள்ளாமல் போன புதல்வரைத் தேடும்
சோகந் தாளாத தாயைப் போல."

Monday, February 5, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 4



கவிஞர் மஹாகவி



மஹாகவியை நான் ஆரம்பத்தில் பரிச்சியம் பண்ணிக் கொண்டது அவரது கவிதை நாடகங்கள் மூலமாகத்தான். லும்பினி அரங்கிலும், பொரளை வை.எம்.பி.ஏ அரங்கிலும் இயக்குனர் தாசிசியஸ் அவர்களின் இயக்கத்தில் மேடையேறிய, "கோடை", "புதியதோர் வீடு" ஆகிய பாநாடகங்கள் தான் அவை.

கோடையில் இருந்து பாவரிகள் -

"நின்றந்தக் கோயில் நிமிர்ந்து நெடுந்தூரம் பார்த்துப் பயன்கள் விளைக்கின்ற கோபுரமும்
வேர்த்துக் கலைஞர் விளைத்தமணிமண்டபமும் வீதிகளும் நூறு விளக்கும் பரதத்தின்
சேதிகளைக் கூறும் சிலம்புச் சிறுபாதம் ஆடும் அரங்கும் அறிந்து சுவைஞர்கள் நாடிப் புகுந்து
நயந்திட நீ சோமனுடன் ஊதும் குழலில் உயிர்பெற்றுடல் புளகித்து ஆதி அறையில் அமரும்
கடவுளுமாய் என்றோ ஒருநாள் எழும்பும், இருந்துபார்"


புதியதோர் வீடு பாநாடகத்தில் இருந்து -

வெறுவான வெளிமீது மழைவந்து சீறும்
வெறிகொண்ட புயல்நின்று கரகங்கள் ஆடும்
நெறிமாறு பட நூறு சுழிவந்து சூழும்
நிலையான தரைநீரில் இலைபோல் ஈடாடும்
சிறுநண்டு கடல்மீது படமொன்று கீறும்
சிலவேளை இதை வந்து கடல்
கொண்டுபோகும்


இதுபோல நாடகம் முழுவதும் பேச்சோசையில் கவிதை வரிகள் வரும். பா நாடகம் என்றால் அது எனக்கு அன்னியமானதாக இருக்கும் என்ற என் நினைப்பு தவறு என்று புரிந்து கொண்டேன். நாடகம் எனக்கு நன்றாக பிடித்து விட்டது.

எனக்கு ஒரு ந்ண்பன் இருந்தான். இலங்கை நிர்வாக சேவையில் உயர் பதவி வகித்த சிங்காரவேல் என்ற அந்த ந்ண்பன் பின்னர் விபத்தொன்றில் மரணித்து விட்டான். அவன் மஹாகவி மீது மிகுந்த பற்று வைத்திருந்ததோடு, அவருடைய நாடகங்களில் சிறு பாத்திரங்களிலும் விருப்பத்துடன் நடிப்பவன். அவரைப் பற்றி அடிக்கடி சொல்லியும், அவரது நூல்களை படிக்கத்தந்தும் என்னையும் அவரையும் இணைக்கும் பாலமாக செயற்பட்டான்.

இவ்வாறு மேற்சொன்ன பாநாடகங்கள் மூலமும், அவரது "குறும்பா" முதலான நூற்கள் மூலமும் மஹாகவி மீது மானசீகமான அபிமானத்தை வளர்த்துக் கொண்டேன், மட்டக்களப்பில் மஹாகவி ஒரு நிர்வாக அதிகர்ரியாக இருந்தபொழுது, அவரே முன்னின்று நடத்திய 'அண்ணாவியார் மகாநாட்டில்" கலை நிகழ்ச்சி செய்ய போயிருந்த வேளையில் தான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும், எங்கள் ஒவ்வொருவரினதும் வசதிகள் குறித்து அக்கறையாக விசாரித்து ஆவன செய்த அந்த "சாதாரண மனிதரின்" உயர்ந்த பண்பும், இரக்கமும் அவரது கவிதைகள் கூறுவது போலவே இருந்ததில் எனக்கு ஆச்சர்யம் இருக்கவில்லை.

1971ல் அரசகரும மொழித் திணைக்களத்தில், உதவி ஆணையாளராகப் பதவி பெற்று கொழும்புக்கு வந்தார். அப்போது இலங்கை வானொலியில் "கலைக்கோலம்" நிகழ்ச்சியை த்யாரித்து வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். "கலைக்கோலம்" என்பது நாடகம், நடனம், திரைப்படம், படைப்பிலக்கியங்கள் சம்பந்தமான விமர்சக ரீதியிலான ஒரு வாராந்த சஞ்சிகை நிகழ்ச்சி. தற்செயலாக அவரை வானொலி நிலையத்தில் சந்தித்தபோது, என்னையும் அந்நிகழ்ச்சிக்கு எதாவது பங்களிப்பு செய்யச்சொன்னார்.

ஏற்கெனவே காவலூர் இராசதுரை என்ற பிரபல ஒலிபரப்பாளர் "கலைக்கோலம்" நிகழ்ச்சியை நடத்திய காலத்தில் மிக அரிதாக பங்குபற்றியிருந்தேன் என்றாலும், என் புலமை, ஆளுமை பற்றிய சுயமதிப்பீட்டை அவருக்குச் சொன்னேன். ஆனால் அவர் எனக்கு உற்சாகமூட்டி, "விமர்சகரின் பார்வையில் இல்லாவிடினும் ஒரு ரசிகனாக உங்கள் எண்ணங்களை சொன்னால் போதும்" என்று சொல்லி, கவிஞர் மு. பொன்னம்பலத்தின் "அது" என்ற கவிதைத்தொகுதியை என்னிடம் தந்தார்.

மு. பொன்னம்பலத்தின் கவிதைக்கோலங்களை ரசிகனாய் தரிசித்தேன்.
" அந்தி அடிவான், அமுதக் கடைசலென
குந்தி யெழும்நிலவு, பூவரசங் குழையூடாய்
சிந்திக் கிரணங்கள் செல்லம் பொழிகின்ற
காலைப் பரிதி, ககனச் சிறுபறவை,
"ஏலோ" எனநீர் இறைப்போர்- இவையெனது
பிஞ்சு மனதைப் பிசைய, மறுகணமே
பெஞ்சில் எடுத்தெச்சில் பெய்து சுவரெல்லாம்
நெஞ்சில் புரண்ட நினைவுக்குத் தொட்டிலிட.....
என்ன விதமாய் இளமை மறைகிறது"


அவரது கவிதைகள் என் நெஞ்சில் உருவாக்கிய உணர்வுக்குவியலை எழுத்தில் வடித்துக்கொண்டு, ஒலிபரப்புக்கு முன் காட்டி அங்கீகாரம் பெறுவதற்காக மகாகவியின் வீட்டிற்கு விரைந்தேன்.(அவர் அப்போது கொழும்பில் பாமன்கடையில் இருந்தார்).

நான் அப்படி விரைந்ததுக்கு என் கருத்தாக்கம் வானொலியில் ஒலிபரப்படும் சந்தோசம் தவிர்ந்த இன்னமொரு புறக்காரணியும் இருந்தது. அதற்காகக் கிடைக்ககூடிய சன்மானம் (15 ருபா) மாதக்கடைசியில் வருமானம் குறைந்த ஒரு எழுதுவினைஞனான எனக்கு மிகப்பெரிதாகப் பட்டது.

மகாகவி வீட்டில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ வெறிச்சோடிய சூழல். அருகில் வசிப்பவர்களிடம் கேட்டேன். அவர் இருதய நோயுற்று, கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. துணுக்குற்ற நான் அங்கிருந்தே பஸ் எடுத்து கொழும்பு பெரியாஸ்பத்திரிக்குப் போனேன். அவரது நிலை பாரதூரமானதாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஆனால் அந்தவாரம் நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்யப்படாமல் போய் விட்டால்..

மனம் அங்கலாய்த்தது. வள்ளல் சீதக்காதியை கடைசியாக காணவந்த தமிழ் புலவரை ஒருமுறை நினைத்துக்கொள்ளுங்கள்.

ஆஸ்பத்திரியில் பார்வையாளர்கள் வந்து போய்விட்ட நிலையில், கணகளை மூடிப் படுத்திருந்த மகாகவியின் முன்னால் போய், கையில் எழுத்துப்பிரதியுடன் வியர்க்க, விறுவிறுக்க நின்றேன். கண் விழித்து பார்த்தவர், " எழுதி விட்டீரா.. யோசிக்காதையும்.. நான் சுகமாகி வந்தவுடனே நிகழ்ச்சி செய்வோம்" என்று சொல்லி, பிரதியை வாங்கி "இருக்கட்டும்..வாசித்துப் பார்க்கிறேன்" என்று தலையணைக்கு கீழ் வைத்துக்கொண்டு விடை கொடுத்தார்.

அதுதான் அவர் என்னோடு பேசிய கடைசி வார்த்தைகளாகப் போயின. அந்த "அசாதாரண் மனிதரின் சரித்திரம்" நிறைவுற்றது.

கடைசி,கடைசியாக மழை தூறிய ஒரு பொழுதில், மருதானயில் டீன்ஸ் றோட்டில் உள்ள ஒரு மலர்ச்சாலையில், அவரது உடல் யாழ்ப்பாணம் கொண்டு போவதற்காக பெட்டியில் வைத்து மூடப்படுவதை, சற்று ஒதுங்கியே நின்று கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு நின்றவர்களுடன் நான் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. யாரையுமே எனக்கு தெரியாது. அவரைத் தவிர.

"நீண்டு கிடந்தபடி
நீ துயின்ற பெட்டியினை
வண்டியிலே ஏற்றுதற்கு
நானும் இரு கைகொடுத்தேன்

கை கொடுத்து விட்டுக்
கருந்தார்ப் பெருந்தெருவைப்
பார்த்தபடி நின்றேன்
நான் பார்த்தபடி நின்றேன் காண்..."


- மகாகவியின் மரணம் குறித்து அவரது நெருங்கிய நண்பர் எம். ஏ. நுஹ்மான் எழுதிய கவிதை வரிகள்.

Sunday, February 4, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 3


சிறுகதை எழுத்தாளர் அ.முத்துலிங்கம்


இந்திய சஞ்சிகையான "கல்கி" எந்த ஆண்டில் "ஈழத்துச்சிறுகதைப்போட்டியை நடத்தியது என்று எனக்கு ஞாபகம் இல்லாவிட்டாலும், அந்த சிறுகதைப்போட்டியின முடிவுகளை. ஆவலுடன் பார்த்திருந்து வாசித்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.அந்தப்போட்டியில் பரிசுபெற்ற சிறுகதைகள் முதல் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொண்ட கதைகள் வரை எல்லாவற்றையும் படிததேன். ஆனால் அவற்றுள்ளே என் மனதில் இடம்பிடித்த கதை - அ.முத்துலிங்கத்தின் "அனுலா" என்ற இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதைதான்.


ஒரு இளைஞனாக இந்தச்சிறுகதையை நான் வாசிக்க, வாசிக்க என் இதயத்தில் ஆழமாய் பதிந்துபோனது. மனப்பாடமாக ஆகுமளவிற்கு பலமுறை வாசித்திருப்பேன். இக்கதையின் ஓட்டம், முக்கிய பாத்திரத்தின் குணாதிசயங்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அந்தப்பாத்திரம் எனது அபிமானத்துக்குரிய (இரக்கத்துக்குரிய?) அனுலாவை வேதனைக்கு உள்ளாக்குவதை நான் பரிபூரணமாக வெறுத்தேன். கடைசி வசனம் கூட எனக்கு இன்றுவரை ஞாபகத்தில் இருக்கிறது "இன்னும் எத்தனை நாளைக்கு உன்னிடம் இப்படி யாசிக்கப்போகிறேன்".....விளக்கு எப்போது அணைந்தது...ஒரு துளிகூட காற்று வீசவில்லையே.

யாழ்ப்பாணத்தில் தொடங்கி ரொறன்ரோ வரை.. எத்தனை மைல்கள்..எத்தனை ஆண்டுகள் அவரை தேடிக் களைத்து, எதிர்பாராமல் ஸ்காபரொவில் முதன்முதலாக சந்தித்த வேளையிலே இந்த வசனத்தை அவருக்கு மறக்காமல் சொன்னேன். அவர் சற்று நேரம் பேசாமல் இருந்தார்.

அந்தப்போட்டியிலே "அனுலா"தான் முதல் பரிசைப் பெற்றிருக்கவேண்டுமென்பதுதான் எனது அசையாத முடிவு. கல்கியில் "அனுலா"வை வாசித்த நாள் தொடக்கம் அதன் படைப்பாளியின் மிகச்சிறந்த ரசிகனாக நான மாறி விட்டேன். அவருடைய "அக்கா" சிறுகதைத்தொகுப்பை முதன்முறையாக வாங்கிய பொழுத (பின்னர் பல பிரதிகள் வாங்கினேன்.) நான் அவருடைய ரசிகர் மன்றத்தில் சேர்ந்த மாதிரித்தான். ஏன் அப்படி ஒரே சிறுகதைத்தொகுப்பின் பல பிரதிகளை வாங்கினேன் என்று நீங்கள் யோசிக்கலாம்.- என் நண்பர்கள் ஒவ்வொரு முறையும் அதை இரவல் வாங்கிவிட்டு திருப்பிதராமல் விட்டு விடுவார்கள்.

யாழப்பாணத்தில் ஒரு மறக்கமுடியாத நாளிலே, நான் கடைசிமுறையாக "அக்கா" சிறுகதைத் தொகுதியை வாங்க முனைந்து தோறறுப்போன கதையை இனிச் சொல்கிறேன்.. அன்று 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் ஆரம்பிக்கும் என்று இருந்தது. நான் எனது பஜாஜ் ஸ்கூட்டரில் எனது இணுவில் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். கன்னாதிட்டி சந்தியைக் கடக்கும்போது ஒரு புத்தகக்கடையின் அலமாரியில், மிகவும் பரிச்சயமான புத்தக அட்டை மாதிரி - நீலமும், பச்சையும் கலந்த அழகான மயில் இறகு மாதிரி தெரிந்தது - ஆமாம்..அது அக்கா சிறுகதைத்தொகுதிதான்.. ஊரடங்கு நேரம் நெருங்கி விட்டதினால் அடுத்த நாள் வந்து சிறீலங்கா புத்தக நிலையத்தில் - அதுதான் பெயர் - புத்தகத்தை வாங்கலாம் என்ற முடிவுடன் எனது பயணம் தொடர்ந்தது.

ஆனால் சோகம் என்னவென்றால் நான் அடுத்தநாள் அங்கே போனபொழுது "அக்கா"வின் கடைசிப்பிரதி இருக்கவில்லை. கடை ஊழியர்கள் என்னை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டெ அலமாரிகள் முழுவதும் தேடிப்பார்த்தார்கள். இல்லவே இல்லை.
"இருந்தது..நான் கண்டேன்" என்று சொல்லிக்கொண்டு நிற்கும் என்னை அவர்கள் சறறு வித்தியாசமாக பார்க்கத்தொடங்க நான் அங்கிருந்து புறப்பட்டேன்.
அதன்பிறகு, யாழ்ப்பாணததில் தொடர்ந்த பிரச்சினைகளினால்;, நாங்கள் நேசித்த இணுவிலை விட்டு குடும்பமாக,கொழும்பு வரநேர்ந்தது. "அக்காவை" அத்தோடு தற்காலிகமாக மறந்து போனேன்.

கொழும்புக்கு வந்தபின்னர், எனது அபிமான எழுத்தாளர் எங்கிருக்கிறார் என்று விசாரிக்க, அவர் ஐ.நா வில் வேலை செய்கிறார்...நாடு, நாடாக பறந்து திரிகிறார் என்று சொன்னார்கள். எனது வலைப்பதிவில் கூட,அவரது ஈ-மெயில் விலாசம் தெரிந்தால் சொல்லுங்கள் என்று குறிப்பு ஒன்று போட்டேன். எந்த பலனுமில்லை. ஏறக்குறைய கனவாய், பழங்கதையாகப் போய்விட்டது.

பிறகு ஒருநாள், ஸ்காபரோவில் இலக்கியச் சந்திப்பு ஒன்றுக்கு, எந்தவிதமான இலக்கிய அந்தஸ்தும் இல்லாத எனக்கும் அழைப்பு வந்ததினால் போயிருந்தேன்.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக வந்தவர்கள் எல்லோரையும் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்தச் சொன்னார்கள். வட்டமாகச்சொல்லிக்கொண்டே வந்து, ஒரு இடத்தில் "நான் முத்துலிங்கம்.. சிறுகதை எழுத்தாளன்" என்று மெல்லிய குரலில் யாரோ சொல்லிக்கேட்டது. அவ்வளவுதான். என் அபிமான எழுத்தாளரைத் தேடிய என் தேடல் முற்றுப்புள்ளி அடைந்தது.


நாங்கள் நெருங்கியவர்களானோம். அவர் தனது கையொப்பமிட்ட "அ.முத்துலிங்கம் கதைகள்" என்ற தொகுதியை அன்பளிப்பாக தந்து உதவினார். நான் தொலைத்த அத்தனை "அக்கா" சிறுகதைத் தொகுதிகளுக்கும் மேலானதாக அது இருந்தது.

"அனுலா"வின் படைப்பாளிக்கு மிகப்பெரிய நன்றி.

Saturday, February 3, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 2



மெல்லிசைப் பாடகர் எஸ்.கே.பரராஜசிங்கம்

எங்கள் திணைக்களத்தில் நடந்த கலைமகள் விழாவில் கர்நாடக கச்சேரி செய்வதற்காக இரண்டு சகோதரர்கள் வந்தார்கள். மூத்தவர் டாக்டர் எஸ்.கே.மகேஸ்வரன், இளையவர் எஸ்.கே.பரராஜசிங்கம் என்று அறிவிப்பு செய்தார்கள். இனிமையாகப் பாடியதோடு, எங்களோடெல்லாம் மிகுந்த அன்பாக நடந்து கொண்டார்கள்.

எங்களுக்கு மிகவும் பிடித்த மெல்லிசைப்பாடல்களான "சந்தன மேடை என் இதயத்திலே",
"அழகான ஒரு சோடி கண்கள்" போன்றவற்றை பாடியவர் என்பதோடு, எஸ்.கே.பரராஜசிங்கம் (பரா அண்ணை) அவர்களுடைய இனிய சுபாவம், அவரை எனது ஆதர்சத்துக்கு உரியவராக்கியது.

("சந்தன மேடை எம் இதயத்திலே" பாடலுக்கு இசையமைத்ததோடு பராவுடன் இணைந்து பாடியவர் - பிரான்ஸ், பாரிஸ் நகரில் வாழ்ந்த, காலஞ்சென்ற எம். ஏ.குலசீலநாதன்.
பாடலை இயற்றியவர்- பராவின் நெருங்கிய உறவினரும், தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை தலைவரான பேராசிரியர் என். சண்முகலிங்கன்)


எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்கள் இந்திய திரை இசைப்பாடல்களின் ஆரம்பகாலத்தைப்பற்றி நிறையச் சொல்லுவார். ஒரு திரைப்படத்தில் (தியாகராஜ பாகவதர் நடித்த முதல்படமான "பவளக்கொடி" -1934) 50க்கு மேற்பட்ட பாடல்கள்(ஆமாம்...நம்புங்கள்) இடம்பெற்றதிலிருந்து தொடங்கி, அப்பாடல்கள் அமைந்த கர்நாடக ராகங்களை சொல்லி, பாடிக்காட்டுவார். தியாகராஜ பாகவதர், ஹொன்னப்ப பாகவதர், தண்டபாணி தேசிகர், பாபனாசம் சிவன் போன்றோரை எல்லாம் எனக்கு பரிச்சியமாக்கினார். கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சிபெற்று ஈடுபாடு கொண்டவராக இருந்த போதிலும், இசையில் பரீட்சார்த்தம் செய்யப்படுவதை அவர் விரும்பினார். பிரபல கர்நாடகஇசைப் பாடகர் மகாராஜபுரம் சந்தானம் அவர்களும், மெல்லிசை மன்னர் எம.எஸ் விஸவநாதன் அவர்களும் இணைந்து வழங்கிய இசைவடிவத்தைப்பற்றி மிகவும் சிலாகித்துக்கூறி, அதன் நுணுக்கங்களை எனக்கு உணரத்தியிருக்கிறார்.


பரராஜசிங்கம் அவர்களை எங்கள் நாட்டு மெல்லிசையின் பிதாமகர் என்று அழைப்பார்கள். காவலூர் ராசதுரை அவர்களின் தயாரிப்பில் ஒரு வர்த்தகசேவை நிகழ்ச்சியொன்றில்தான் மெல்லிசைப்பாடல்கள் ஆரம்பத்தில் ஒலிபரப்பாகி வந்தன. ஆனால் இவை வானொலியில் ஒலித்து, காற்றோடு கலந்து போயின. வானொலியை விட்டால் இதன் ஒலிப்பதிவுகள் யாரிடமும் இருக்கவில்லை. காலப்போக்கில், மாறிவரும் சூழ்நிலையில் வானொலி நிலையத்தில் இருந்துகூட அவை காணாமல் போய்விடலாம் என்றும் எனக்கு தெரிந்திருந்தது. சில்லையூரர் எழுதிய "தணியாத தாகம்" ஒலிப்பதிவு நாடாக்கள் தொலைந்து போகவில்லையா ?


இந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து, தெரிந்தவர்கள் "இந்த பாடல் பதிவு பெற்றுத்தரமுடியுமா.." "அந்தப் பாடல் வேண்டும்" என்று தாங்கள் விரும்புகின்ற பாடல் பட்டியல்களை அனுப்பத் தொடங்கினார்கள். அப்படி பாடல்களை வானொலி நிலையத்தில் இருந்து அனுமதி பெற்றோ, பெறாமலோ வெளியே எடுப்பது சாத்தியமாக இருக்கவில்லை. எனவே "உங்கள் மெல்லிசைப்பாடல்களை ஒரு தொகுப்பாக வெளியிட்டால் என்ன" என்று பரராஜசிங்கம் அவர்களை நச்சரிக்கத் தொடங்கினேன்.

இதன் நடைமுறைச்சிக்கலை நினைத்தோ என்னவோ அவர் நீண்ட நாட்களாக ஒத்திப்போட்டு வந்து, கடைசியில் சம்மதித்தார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்கு அதற்கான தொகை செலுத்தி பாடல்களைப் பெற்றுக் கொண்டோம். சில பாடல்களில் பின்னணியில் ஒலிக்கும் இரைச்சலை நீக்க முயன்றால் பாடல் வரிகளே சேதப்பட்டுவிடும் என்பதினால் அவற்றை அப்படியே விட்டோம். சற்று இசை சேர்த்து மெருகு படுத்தினால் பழமைச்சிறப்பு இல்லாமற் போய்விடும் என்பதினால் அந்த யோசனையும் கை விடப்பட்டது.


இடையில் எனக்கு வந்த சோதனைகளையும் தாண்டி, நண்பர் அப்துல் ஹமீட்டின் துணையுடன் நான் கோலாகமாக, கொள்ளுப்பிட்டி சசகாவா மண்டபத்தில் "ஒலி ஓவியம்" ஒலிநாடாவை வெளியிட்டு வைத்தேன். அணை கட்டிய அணிலின் கதைதான்.






கனடாவில் அருவி வெளியீட்டகம் இந்த மெல்லிசைப்பாடல்களை அவருடைய அனுமதியுடன் இறுவட்டாக "குளிரும் நிலவு" என்ற பெயரில் வெளியிட்டார்கள். தனது பாடல்கள் இறுவட்டாக வெளிவரும்போது பரா அண்ணை காலமாகி விட்டார்.

இன்று உலகளாவிய ரீதியில் அவரது பாடல்களை ஏராளமானோர் கேட்பதற்கு நானும் ஒரு வகையில் காரணமானதையிட்டு பெருத்த மகிழ்ச்சியடைகிறேன்.

Thursday, February 1, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 1


கவிஞர் சில்லையூர் செல்வராஜன்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (வருமானவரிக்காரர்கள் தான்) நடாத்திய ஒரு பிரம்மாண்டமான தமிழ் விழாவில், கவியரங்கத்தில் பங்குபற்ற வந்திருந்த கவிஞர்களிடையே, பட்டுவேட்டி, ஜிப்பா, சரிகைச் சால்வையடன், பென்சில் கீற்று மீசையுடன், அசப்பில் ஒரு சினிமா நட்சத்திரம் போல ஒருவர் எழுந்து நின்று , இனிய குரலில் "தேனாக.." என்று தொடங்கி, "சில்லாலை என்ற சிற்றூரில், நிலவில், முற்றத்து மணலில், அம்மா தன் கைவிரல்கள் பற்றி, ஆனா, ஆவன்னா எழுதியது" பற்றி கவிதைவரிகளில் சொன்ன அந்த நிமிடமே நான் அவரை என் ஆதர்சத்துக்கு உரியவராக்கிக் கொண்டேன்.

ஒரு வெளிநாட்டவரின் தனியார் விளம்பர நிறுவனத்தில் சில்லையூரார் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தார்.

சில்லையூரார் "ஜிங்கிள்ஸ்" (Jingles) என்ற விளம்பர வாசகங்களை அற்புதமாக கவி நயத்தடன் உருவாக்குவார். உதாரணத்துக்கு ஒரு ஆங்கில வாசகம் - Upali நிறுவனத்தின் Unic றேடியோவுக்கான விளம்பரம் , இவ்வாறு உப்பு சப்பில்லாமல் வரும் -
In electronic engineering unic is matchless

அதற்கு சில்லையூரார் இவ்வாறு தமிழில் எழுதியிருந்தார் - மின்னியக்க பொறிவன்மையில் தன்னிகரற்றது யுனிக்" - சொல்லிப்பாருங்கள்.
அந்தச்சந்தத்தின் அழகு ஒரு விளம்பரவாசகத்தில் கூட வந்து பொருந்தியிருப்பதைக் காணலாம்.

சில்லையூராரிடம் இருந்த நூல் சேகரிப்பு பிரக்யாதிபெற்றது. இலங்கையில் வெளியான நூல்கள், சஞ்சிகைகள் என்பனவற்றையெல்லாம் வரிசைப்படுத்தி வைத்திருந்தார். பல சிறுகதை எழுத்தாளர்கள் தாங்கள் சிறுகதைத்தொகுதிகள் வெளியிடும்பொழுது, தவறவிட்ட தங்களுடைய சிறுகதைகளை இந்த சேகரிப்பில் இருந்து பெற்றுக் கொண்ட சம்பவங்கள் எனக்குத் தெரியும்.
ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி என்ற நூல் எழுதுவதற்கு அவருடைய சொந்த சேகரிப்புத்தான் தூண்டியிருக்கவேண்டும்.

ஒரு முறை சில்லையூராரிடம் கேட்டேன்- "உங்கள் வீட்டு இலக்கம் ஞாபகத்தில் இருக்க மறுக்கிறதே..என்ன செய்யலாம்"
அவர் சொன்னார் - "ஏழேழு தலைமுறைக்கும் என் புகழ் மங்காது என்று ஞாபகம் வைத்துக்கொள்"
அவரது வீட்டின் இலக்கம் - (7X7) 49/7

ஷேக்ஸ்பியரின் நாடகமான ஜூலியஸ் சீசரில் , புறூட்டஸ், மார்க் அன்ரனி இருவரும் , சீசரின் மரணச்சடங்கில் பேசுகின்ற பகுதியை மொழிபெயர்த்திருந்தார். ஒருமுறை அந்தப்பகுதியை அந்த இரண்டு பாத்திரங்களின் குணாதிசயங்களை வேறுபடுத்திக்காட்டும் வகையிலே எனக்கு அற்புதமாக நடித்துக்காட்டினார். நான் கண்ணீர் விட்டேன்.

சில்லையூரார் உண்மையில் "பல்கலைவேந்தராகவே" திகழ்ந்தவர். கவிஞர், எழுத்தாளர், மேடை நடிகர், திரைப்படநடிகர் (ஆங்கில திரைப்படங்கள் உட்பட), வானொலி தயாரிப்பாளர், பாடகர், கூத்துக்கலைஞர்- இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சில்லையூரார் தனது கவிதைகளை தானே உரைத்திட "கவிதைச்சிமிழ்" என்ற ஒலிப்பேழை ஒன்று வெளியிடப்பட்டத.

தணியாத தாகம் கலைஞர்கள்













நிற்பவர்கள் (வலமிருந்து இடம்) வி.என்.மதியழகன், ஆர்.எஸ்.சோதிநாதன், கே.எம்.வாசகர், எஸ்.வாசுதேவன், கே.எஸ்.பாலச்சந்திரன், பி.என்.ஆர்.அமிர்தவாசகம், கே.மார்க்கண்டன், எம்.கே.ராகுலன், கே.சந்திரசேகரன், எஸ்.ஜேசுரட்னம், எஸ்.மயில்வாகனம், எஸ்.எழில்வேந்தன், எஸ்.சிவசுந்தரம், என்.கே.தர்மலிங்கம்
இருப்பவர்கள் (வலமிருந்து இடம்) சசி பரம், யோகா தில்லைநாதன், சந்திரப்பிரபா மாதவன், கே.எஸ்.நடராஜா(வானொலி தமிழ் நிகழ்ச்சி தலைவர்), விஜயாள் பீற்றர், ஷாமினி ஜெயசிங்கம், செல்வநாயகி தியாகராஜா, மொறின் கனகராயர்

அவரது தயாரிப்பில் மக்கள் வங்கி விளம்பர நிகழ்ச்சியாக வந்து வெற்றி பெற்ற " கோமாளிகள் கும்மாளம்" ஏறக்குறைய இரண்டாண்டுகள் ஒலிபரப்பாகி முடிவடைந்த நேரம். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அவரே எழுதிய "தணியாத தாகம் " என்ற திரைப்படச்சுவடி (Film Script) நூல்வடிவில் வெளிவந்திருந்தது. தற்செயலாக அந்த நூலை பம்பலப்பிட்டி கிறீன்லண்ட்ஸ் புத்தகக்கடையில், பார்த்த நான் ஆவலுடன் வாங்கி வாசித்த பிறகு, அதையே அடுத்த தொடர்நாடகமாகச் செய்யலாம் என்று அவருக்குசொன்னேன். ஒரு நகைச்சுவை நாடகத்துக்கு பிறகு, ஒரு சோகமயமான நாடகம், அதுவும் யாழ்ப்பாணத்தமிழில் எடுபடுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. நான் விடவில்லை. செய்து பார்ப்போம் என்று விடாப்பிடியாக நின்றேன். "கோமாளிகள் கும்மாளத்தில்" முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்கள் எவரும் இல்லாமல் புதிய நடிகர் குழாம் ஒன்று தெரிவாகியது.

கே.எஸ்.பாலச்சந்திரன்(சோமு), விஜயாள் பீற்றர்(யோகம்), கமலினி செல்வராஜன்(கமலி), கே.மார்க்கண்டன்(மாமா), செல்வநாயகி தியாகராஜா(மாமி), வாசுதேவன்(குமார்), ஷாமினி ஜெயசிங்கம்(சோமுவின் காதலி), எஸ்.கே. தர்மலிங்கம்(அப்பா), யோகா தில்லைநாதன்(அம்மா), எஸ். ஜேசுரட்னம், பி.என்.ஆர்.அமிர்தவாசகம், எஸ்.எழில்வேந்தன் என்ற புதுக்குழு களமிறங்கியது.


தொடர் நாடகம் ஆரம்பித்து சில வாரங்களில், எராளமான நேயர்கள் வானொலி நிலையத்திறகும், மக்கள் வங்கி முகவரிக்குமாக பாராட்டுக்கடிதங்கள் எழுதத் தொடங்கினார்கள். சோமுவும், தங்கைகள் யோகம், கமலி இருவரும் தங்களின் உடன்பிறப்புகளாக நினைத்து, அவர்களின் துன்பங்களுக்காக கண்ணீர் விட்டு, சந்தோசங்களில் மகிழ்ச்சி அடைவதாக அந்தக்கடிதங்கள் வந்தன. நாட்டின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் ஞாயிறு தோறும் நாலரை மணிக்கு வீடுகளில், தோட்டங்களில், வயல் வரப்புகளில், டிரான்ஸிஸ்டர் ரேடியோக்களோடு காத்திருக்கிறோம் என்றார்கள்.


யாழ்ப்பாணம் சென்ற கொண்டிருந்த இ.போ.ச பஸ் ஒன்று ஞாயிறு 4.30க்கு " அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே..கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே" என்று ஆரம்பப்பாடல் ஒலிக்க, பஸ்ஸில் இருந்த பிரயாணிகளின் ஏகோபித்த வேண்டுகோளுக்க இணங்க, திருநெல்வேலி தேனீர் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டு , தணியாத தாகம் கேட்கப்பட்டதாக யாரோ சொல்லக்கேட்டு ஆனந்தமடைந்தோம்.


யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு அபிமான நேயர், "சோமு"வின் குடும்பகஷ்டத்தை பொறுக்கமுடியாமல் 100ரூபாவுக்கான காசோலையை அனுப்பியிருந்தார். தெல்லிப்பளையிலிருந்து மூன்று சகோதரிகள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை நீண்ட கடிதங்களில் எழுதி அனுப்பினார்கள். நாடகத்தை வானொலி ஏற்றவகையில் மாற்றி எழுதி வழங்கிய கே.எம்.வாசகர் , முடிவிலே இந்த சகோதரிகளின் விருப்பபடி சிறு மாற்றம் ஒன்றைச் செய்யும் அளவிற்கு அவர்களது பங்களிப்பு இருந்தது.


இத்தொடர்நாடகத்தின் இறுதிக்காட்சி ஒலிப்பதிவு செய்யப்பட்டபொழுது, யோகத்தின் மரணஊர்வலக் காட்சியில் நாங்கள் எல்லோரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தடுமாறினோம். நீண்ட நாட்களாக அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடமுடியாமல் தவித்தோம். இப்படி ஒரு வானொலி நாடகம் நிறைவெய்தியது.