Tuesday, February 6, 2007

என்னைக் கவர்ந்தவர்கள் - 5


கவிஞர் சு.வில்வரத்தினம்

பல வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த ஒரு சிற்றிதழிலே (லண்டனில் வெளிவந்தது) நான் முன் அறிந்திராத ஒரு கவிஞரின் கவிதையை வாசித்த பொழுது என் நெஞ்சில் ஏற்பட்ட சிலிர்ப்பினலும், சோக உணர்வினாலும் நீண்ட நாட்களாக அந்த கவிதை சொன்னதையும் (வரிகளை மறந்து போனேன்) அந்த கவிஞரின் பெயரையும் ஞாபகமாக வைத்திருந்தேன்.

கவிதை வரிகளையும், கவிஞரையும் இனம் கண்டு கொள்ள வேண்டுமென்ற தேடலில், ஒருநாள் இந்த வலைப்பக்கத்தில் அவருடைய சில கவிதைகளையும் அவருடைய புகைப்படத்தையும் காணக் கிடைத்ததினால் மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ச்சியாக, மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தின் வாயிலாக அவரது " அகங்களும் முகங்களும் என்ற் கவிதைத் தொகுதியில் நான் தேடிய கவிதையையும் கண்டுபிடித்தேன். இதுதான் அந்தக் கவிதை.

'நிலவும் நெகிழ்வும்' என்னும் கவிதையில்

"எல்லாம் முடிந்து நெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ் சுமந்தபடி மெல்ல அசைநடைபோடும் மாட்டு வண்டிகள்; வண்டிகளின் பின்னே நாங்கள்....திரும்பிப் பார்த்தால் பின்னிலவில், வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்ட வயல்வெளி வறிதே கிடக்கின்ற சோகம் நெஞ்சைப் பிழியும் துயர்- இன் இசையாய்....

அறுவடை முடித்த வயல் வெறுமையாய், வறுமையாய் கிடக்கின்ற சோகத்தை நெஞ்சில் பதிக்கும் ஒரு கவிதை.

தான் நேசித்த மண்ணை விட்டு இடம் பெயர வேண்டிய நிலை அவருக்கும் நேர்ந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாய் இந்தக் கவிதை -

காற்றுக்கு வந்த சோகம்


முழுவியளத்துக்கு
ஒரு மனுவறியாச் சூனியத்தைக் கண்டு
சூரியனே திகைத்துப் போன காலையிலிருந்து
இப்படித்தான்
உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக்
கிடக்கிறது இக்கிராமம்.

கிராமத்தின் கொல்லைப் புறமாய்
உறங்கிய காற்று
சோம்பல் முறித்தபடியே
எழும்பி மெல்ல வருகிறது.

-------------

என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல.

-----------------

வழுக்கிக் கிடந்தது ஓர் முதுமை.
ஊன்றுகோல் கையெட்டாத் தொலைவிலே.
இழுத்துப் பறிக்கும் மூச்சினிடையே
எதையோ சொல்ல வாயெடுக்கவும்
பறிபோயின சொற்கள்.
பறியுண்ட மூச்சு
மடியைப் பிடித்து உலுக்குவதாய்
காற்று ஒருகால் நடுங்கிற்று.

-------------

பக்கத்திருந்து உறவுகள்
பால் பருக்க,
கால் பிடிக்க,
கை பிடிக்க,
தேவாரம் ஓத,
கோலாகலமாய் பிரிகின்ற உயிர்
அநாதரவாய்,
அருகெரியும் சுடர் விளக்கின்றி
பறை முழக்கமின்றி, பாடையின்றி.....
அட, சாவிலும் கூட ஒரு வாழ்விருந்த கிராமம் இது.

காற்று பரிதவித்தது.
"எங்கே போயின இதன் உறவுகள்?"
ஒன்றும் விளங்காமல் அந்தரித்தது.
அதற்கெங்கே தெரியும்?
காற்றுறங்கும் அகாலத்தில்தான்
மூட்டை முடிச்சுக்களோடு மக்கள்
கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை.

-----------------

வீதியில் தலைநீட்டிய முட்செடியன்றை
வேலியோரமாய் விலக்கியபடியே
மெல்ல நடந்தது காற்று
சொல்லிக் கொள்ளாமல் போன புதல்வரைத் தேடும்
சோகந் தாளாத தாயைப் போல
.


திகைத்து நின்ற காற்றுக்கு - தேரடியில் உறங்கி விழித்த சிறுவன் திருவிழா முடிந்தது என்றறிந்து திகைப்பதுக்கு ஒப்பிடும் உவமை அழகும்,
அட, சாவிலும் கூட ஒரு வாழ்விருந்த கிராமம் இது என்ற வரிகள் கூறும் யதார்த்தமும்
இது போன்ற் சு.வி யின் கவிதைகளுக்கு சாகா வரமளிக்கும்.

சுனாமிப் பேரழிவு ந்டந்த சில நாட்களின் பின்னர் இது நடந்தது. ஒரு நண்பர் மூலமாக கவிஞரின் தொலைபேசி இலக்கம் கிடைக்க, திரிகோணமலையில் அவரது வீட்டுக்கும், வேலையிடத்துக்குமாக அழைத்து, ஒருவாறு அவரோடு பேசினேன். அவரது கவிதைகள் மீதுள்ள என் விருப்பத்தை, "நிலவும் நெகிழ்வும்" கவிதை மூலம் அவரை தேடும் எண்ணம் வந்ததை எல்லாம் சொன்னேன். நீண்ட நேரம் பேசியிருப்போம். அவரை நேரில் பார்த்ததுக்கு ஒப்பாக இருந்தது.

சென்ற டிசம்பர் 10ந்திகதி காலை, நான் நோய்வாய்ப்பட்டிருந்த வேளை, சகோதரர் சச்சி என்னை தொலைபேசியில் அழைத்து சொன்னார் - கவிஞர் இறந்து விட்டார்.

"மெல்ல நடந்தது காற்று
சொல்லிக் கொள்ளாமல் போன புதல்வரைத் தேடும்
சோகந் தாளாத தாயைப் போல."

3 comments:

  1. வில்வரத்தினம் பற்றிய குறிப்பை படித்தேன். அவரரோடு பழகிய காலம் நினைவு வரவும் மனம் குயரில் ஆழ்ந்தது. உங்கள் கட்டுரைக்கு நன்றி

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. ஒரு சிறந்த கவிஞரைப்பற்றி எழுதக் கிடைத்தது என் பாக்கியம்.

    ReplyDelete
  3. கவிஞரின் காற்று வெளிக் கிராமம் , நெற்றி மண், அகங்களும் முகங்களும் ஆகிய கவிதைத் தொகுப்புக்களை வாசித்திருக்கிறேன். அவருடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு எனக்கு திருகோணமலையில் கிட்டியது. இனிய மனிதர் அவர் . அவர் தனது அன்னாரின் மரவை ஒட்டி எழுதிய ஊருக்குத் திரும்பல் அருமையான படைப்பு

    ReplyDelete